காலங்களில் அவள் வசந்தம்......
கலைகளிலே அவள் ஓவியம்.....
மாதங்களில் அவள் மார்கழி.....
மலர்களிலே அவள் மல்லிகை........ அது ஒரு வசந்தகாலம்!
அறுபதுகளின் காற்றைத் தங்களுக்குச் சொந்தமாக்கிய மெல்லிசை மன்னர்கள் கொடுத்த இசை வார்ப்புகளை இன்றும், என்றும் நெஞ்சம் மறப்பதில்லை....
டூயட் மூவீஸ், மோஸர் பேர், மிர்ச்சி ஆகிய நிறுவணங்கள் இணைத்து தயாரிக்க ,பிரகாஷ் ராஜ், பிருத்விராஜ், கோபிகா நடிக்க, மோகன்லால் நடித்த மலையாளப்படமான 'உதயனானதாரம்' படத்தின் ரீமேக் இந்த 'வெள்ளித் திரை'.
இசை வெளியீடு நிகழ்ச்சி நெகிழ்ச்சியாகவே இருந்தது. இப்படத்தின் தியாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜ் தன்னுடைய டூயட் மியூஸிச் நிருவணத்தையும் இவ்விழாவில் துவங்கினார். இந்த இளம் இசையை வாழ்த்துவதற்காக தமிழ் வெள்ளிதிரையின் மெல்லிசை மன்னர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகிய இருவரையும் வரவழைத்து கௌரவம் செய்தார்கள். இந்திய சிறந்த நடிகர்களில் ஒருவரான மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பின்னணி பாடகர்கள் பி.பி. ஸ்ரீநிவாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர்கள் பாலுமகேந்திரா, பாக்யராஜ், மணிரத்னம், இசையமைப்பாளர் வித்யாசாகர் என திரையின் முன்னணி
முகங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
யாரும் சிந்திக்காத ஒன்றை செய்துவிடுவதால் அது வித்தியாசம் என்று அர்த்தம் ஆகிவிடாது, ஒரு சிந்தனை இதயத்தை தொட்டு நெகிழவைக்கும் போது மட்டுமே அது வித்தியாசம். இந்த நிகழ்ச்சியும் இதயத்தை நனைத்தது. அறுபதுகளில் வெளிவந்த பாடல்களை இன்றைக்கு இருந்த சிறுவர்களை பாடவைத்தது அருமை!
நிகழ்ச்சியில் பேசிய அனைத்து உள்ளங்களும் நெகிழ்ச்சிக்கடலில் நனைத்தெடுக்கப்பட்டார்கள். முதலில் மேடை ஏறிய பி.பி.ஸ்ரீநிவாஸ், பாடியே மெல்லிசை மன்னர்களைத் தன் மெல்லிசையோடு வாழ்த்தினார். இவர்கள் மெட்டை யார் பாடியிருந்தாலும் அது வெற்றியடைந்து இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டு எனக்கு பிறகு வந்த எஸ்.பி.பி.. இவர்கள் இசையில் தொடங்கிய அவர் இசைப்பயணம் இன்று எட்ட முடியாத உயரத்தில் இருந்து வருகிறது என்றார்.
அடுத்து பேசியவர் தன்னுடைய குரலை இந்தியாவின் எட்டுத்திசையும் சேர்த்தவர். உலகெங்கும் காற்றுக்குத் தன் குரலால் கிரீடம் சூட்டிய எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசும்போது, இந்த இருவர் கடித்துத்துப்பிய இசையைத்தான் இன்று எல்லா இசையமைப்பாளர்களும் பயன்படுத்துகிறார்கள் என்றார். அவர் கொடுத்த சங்கதிகள் யாராலும் கொடுக்க முடியாது என்றவர். வான் நிலா, நிலா அல்ல, பொன் வாலிபம் நிலா......! என்று பாடி வானத்தில் இருந்த வெண்ணிலவை அரங்கத்தின் உள்ளே இழுத்து வந்தார்.
அடுத்து பேசியவர் மெல்லிசை மன்னரின் இசைக் குழுவில் இருந்தவர். இக்கால மெல்லிசை மன்னர் என்று சொல்லப்படும் வித்யாசாகர். என் குருவைப் பற்றி ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது பேசாமல் என்னால் இருக்க முடியாது, அது வைரமுத்து அவர்களுக்கும், எஸ்.பி.பி. அவர்களுக்கும் நன்றாக தெரியும் என்றவர், இவர்கள் இருவரும் தமிழ் திரையின் இசை கடவுள்கள் என்றார்.
அடுத்து கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது, நான் எதை பற்றி பேசுவது, சமுத்திரத்தில் நின்றுகொண்டு எந்தத் துளியைப் பற்றி பேசுவது, வனாந்திரத்தில் நின்றுகொண்டு எந்த மரத்தைக் கட்டிப்பிடிப்பது. வெள்ளித் திரைக்கு தங்கள் இசையால் தங்கமுலாம் பூசியவர்கள் இந்த இருவரும். தலைமுறைகளை வாழ்த்துபவனைத்தான் தலைமுறைகள் வாழ்த்தும், அதை பிரகாஷ் ராஜ் செய்திருக்கிறார். தமிழ்த்திரையில் பிரிந்தவர்கள் யாரும் இணைந்ததாக சரித்திரம் இல்லை, கலைஞர் / எம்.ஜி.ஆர் இணைந்தார்கள் பிரிந்தார்கள் பிரிந்தவர்கள் சேரவேயில்லை, ஷங்கர் / கணேஷ்.... இணைந்தார்கள் பிரித்தார்கள் பின் சேரவேயில்லை, இளையராஜா / வைரமுத்து இணைந்தார்கள் கலந்தார்கள் பின் சேரவேயில்லை. ஆனால் தமிழ் சினிமாவில் பிரிந்தும் சேர்ந்தவர்கள் எம்.எஸ்.வி / டி.கே.ஆர் மட்டும் தான். காற்றாய் வந்த இவர்களின் இசை நம் கண்ணீரை, வருத்தத்தை, காயங்களை, இன்னும் பலவற்றை ஆற்றி இருக்கிறது. கண்ணதாசன் இருந்திருந்தால் இவர்கள் இருவருக்கும் கிரீடம் சூட்டியிருப்பார். அவர் நிலையை நாங்கள் அடைய முடியவில்லை என்றாலும் நாங்கள் எல்லோரும் கூடி அவர்களை கௌரவிக்கிறோம் என்று தன் உரையில் கவிதைத் தென்றலை வீசினார்.
'வெள்ளித் திரை' படத்தின் இயக்குனர் விஜி பேசும்போது, இவர்கள் இருவரும் தமிழ்த் திரை இசையின் பல்லவிகள்...... மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் இவர்களுக்குப் பின் வந்த சரணங்கள் என்றார்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பேசும்போது, இந்த விழாவை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை. நான் பிரகாஷ் ராஜின் ரசிகன். டிரேன்ட் என்கிறார்கள், அது இல்லவே இல்லை....... மீட்டர், மேட்டர், மெலோடி இருந்தால் பாடல் நிச்சயம் நிலைக்கும் என்றவர்........
அனைவருக்கும் இங்கே ஒரே ஞாயிறு, அதனால் மனிதனாயிரு என்ற வரிகளை பாடி முடித்தார்.....!