நல்ல கருத்துக்கள் மக்களை சென்று சேர வேண்டும் என்றால் அதற்கு இயக்குநர் சேரன் வேண்டும்.
இயக்குநர் நடிகர் பாடலாசிரியர் என்று தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவர்கள் வரிசையில்
இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் சேரன். மாயக்கண்ணாடி படத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு
'பிரிவோம் சந்திப்போம்' படத்தில் யதார்த்த நாயகனாக முத்திரை பதித்து இப்போது 'பொக்கிஷம்'
படத்திற்காக தயாராகி வருகிறார். இதற்கிடையில் சத்தமே இல்லாமல் தன் உதவியாளர் ஜெகன்நாதன் இயக்கும் 'ராமன் தேடிய சீதை'
படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார் சேரன்.
படத்தில் சேரன், பசுபதி, நிதின் சத்யா என்று மூன்று கதாநாயகர்கள் நடிக்கிறார்கள், நவ்யா நாயர், விமலா ராமன், கார்த்திகா, கஜாலா,
ரம்யா நம்பேசன் என்று மொத்தம் ஐந்து கதாநாயகிகள் நடிக்கிறார்கள், வித்யாசாகர் இசையமைக்கிறார்,
இதையெல்லாம் கேட்கும்போதே இது ஒரு வித்தியாசமான முயற்சி என்று தெரிந்திருக்கும்.
ஆனால் தயாரிப்பாளர், இயக்குநர் உட்பட அனைவருமே வித்தியாசமான படம் என்று
அலட்டிக் கொள்ளாமல், ஏதோ முயற்சி செய்திருக்கிறோம் என்றே சொன்னார்கள்...
இதைப்பற்றி இப்படத்தின் யதார்த்த நாயகன் சேரன் பேசுகையில்..... நான் பெரிய நடிகன் இல்லை இருந்தாலும் எனக்கு ஏற்ற மாதிரி
கதாபாத்திரங்கள் அமைந்தால் அதை ஏற்று நடிக்கிறேன். என் 'பாரதி கண்ணம்மா' படத்திலிருந்து 'மாயக்கண்ணாடி' படம் வரை உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஜெகன் நாதன். இடையில் 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்' என்று இரண்டு படங்களை இயக்கினார்.
ஆனால் அவை தோல்வியடைந்தது. அதனால் மூன்றாவது வாய்ப்பையாவது சரியாக அமைத்துக்கொள்ள சொன்னேன். அதன் பிறகு தான் இந்தப் படம் துவங்கியது.
இதில் என்னை தவிர பசுபதி, நிதின் சத்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த இரண்டு
கதாபாத்திரங்களையும் நான் தேர்வு செய்யவில்லை. உங்களிடம் மண்டி போட்டு சொல்கிறேன் இந்த ஐந்து கதாநாயகிகளையும் நான் தேர்வு செய்யவில்லை. உங்கள் படத்தில் நடித்தவர் இதில் நடிக்கிறாரே என்று கேள்விகள் வரும்,
அதுமட்டும் இல்லை, சேரன் நவ்யா நாயர்தான் நடிக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார் என்ற செய்திகளும் வருகிறது. அவர் இந்தப் படத்தில் நடிப்பது பற்றி எனக்கு எந்த சம்மந்தமும் இல்லை. இல்லாத ஒரு விஷயத்தை ஏன் ஊதிப் பெருக்குகிறீர்கள்.
இது போல எல்லாம் எழுதி என்னையும் ஏன் குடும்பத்தாரையும் சில சமயங்களில் மகிழ்ச்சிபடுத்துகிறீர்கள். 'இதுவும் கடந்து போம்' என்று சொல்லி இவைகளை இயல்பாக நான் எடுத்துக்கொள்கிறேன். அந்த காலத்தின் சிவாஜியும் பத்மினியும் சேர்ந்து முப்பத்து எட்டு படங்கள் நடித்தார்களாம், எந்த மன நிலையோடு நடித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.....
இப்படி உணர்ச்சிப்போங்க பேசிக்கொண்டிருக்கும் போதே சேரனின் கண்கள் கலங்க துவங்குகிறது.....
சேரன் அவரின் கதைப்பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்று உதவியாளர்களிடம்
கட்டளை இடுகிறாராம், என்று எழுதி பெரிய கமல்ஹாசன்னு நெனப்பு என்று முடித்திருந்தார்கள்....
என்று சொல்லி முடித்ததும் கண்கள் குலமாகி இருந்தன..... ஆம் எனக்கு நெனப்பு தான்.
அப்படி நினைப்பதால் தான் இன்று ஓரளவுக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரை எடுத்திருக்கிறேன்.
அப்படி ஒரு நினைப்போடுதான் எட்டு படங்களை இயக்கி, ஐந்து படங்களில் கதாநாயகனாக
நடித்திருக்கிறேன், அப்படி எழுதியதில் தவறில்லை. ஒன்று புரிந்துக் கொள்ளுங்கள் கமல்ஹாசன் என்ற நடிகனின் உழைப்பு நாற்பது வருடம்.
நான் வெறும் பத்து வருடம் தான் உழைத்திருக்கிறேன். அந்த உயரத்தை தொட நான்
முயற்சிப்பது உண்மைதான் என்று சொல்லி ஆதங்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ராஜேஷ் யாதவ், பசுபதி, நிதின் சத்யா, இயக்குநர் ஜேகன் நாதன் ஆகியோரும்
நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.