தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

முதலில் இப்படிப்பட்ட ஒரு தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட மாதவனுக்கு ஒரு சபாஷ்.

அலைபாயுதே படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி முதல் படத்திலேயே இளம் பெண்களின் இதயத்தை அலைபாய வைத்தவர் நடிகர் மாதவன். இவரின் சில படங்கள் சரிந்தாலும், 'மின்னலே', 'ரன்', 'தம்பி' என்று தமிழ்த் திரையில் தனது வெற்றிப்படங்களை தொடர்ந்து வருகிறார். இவர் தற்போது நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் 'எவனோ ஒருவன்'. இந்தத் திரைப்படத்தை வெளியிடுவதற்காக 'லூக்கொஸ் பிலிம்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தை துவக்கியுள்ளார்.

சம்பாதித்த பணங்களை வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்து லாபம் பெறுவதையே, சில தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் செய்து வருகின்றனர். சினிமாவில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சினிமாவின் மூலம் கிடைத்த லாபத்தை சினிமாவிலேயே நல்ல படைப்புகளுக்காக முதலீடு செய்பவர்கள் வெகு சிலர். அதுபோல கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் இவர்களின் வரிசையில் மாதவனும் சேருகிறார்.

'டொம்பிவிலி ஃபாஸ்ட்' என்ற இந்திய அளவிலும், உலக அளவிலும் 34 விருதுகளை அள்ளிக் குவித்த மராட்டிய திரைப்படத்தைதான் தமிழில் எவனோ ஒருவன் என்று ரீமேக் செய்கிறார்கள்.

இப்படத்தை மராட்டிய மொழியில் இயக்கிய நிஷிகாந்த் தமிழிலும் இயக்குகிறார். பிதாமகன் போன்ற நல்ல படைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சங்கீதா நாயகியாக நடிக்க, இயக்குனர் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாதவனுக்கு மராட்டிய மொழி தெரியும் என்பதால் இப்படத்திற்கான தமிழ் வசனங்களை அவரே எழுதியுள்ளார். பின்னணி இசையமைத்திருக்கிறார் பி.சமீர். இப்படத்திற்கான முகப்புப்பாடலை இளம் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க இதற்கான பாடல்வரிகளை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம் நாயகர்கள், முளைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இரண்டு படம் வெற்றியடைந்தால் போதும், தன்னுடைய மூன்றாவது படத்திலேயே பெயருக்கு முன்னால் ஒரு பட்டம். ஏன், முதல் படத்திலேயே அடுத்த தளபதி நான்தான் என்ற அறிவிப்போடு அறிமுகமாகுகிறார்கள். விளக்கம் கேட்டால், இது ரசிகர்கள் அளித்த பட்டம் என்று சப்பைக்கட்டு கட்டுவது இயல்பு. ஓரிரு படங்கள் வெற்றியடைந்து விட்டால், 'என்னுடைய படத்தில சண்டைக்காட்சிகள் வேண்டும், குத்துப் பாடல்கள் வேண்டும். இல்லையென்றால் என்னுடைய ரசிகர்கள் ஏமாற்றமடைவார்கள்' என கதையமைத்த இயக்குனர்களிடம் கட்டளையிடுவது வழக்கமாகி வருகிறது. இளம் நாயகர்களில் இதற்கு ஒரு விதி விளக்காக இருப்பவர்கள் மாதவன், ஜீவா போன்றவர்கள்.

அலைபாயுதே, மின்னலே போன்ற படங்களினால் இளம் பெண் ரசிகைகளை பெற்று, செல்லமாக 'மேடி' என்று அழைக்கப்பட்டு வந்தார் மாதவன். இவரை அதிரடி நாயகனாக மாற்றியமைத்த திரைப்படங்கள் ரன், தம்பி. இதனால் இளைஞர் பட்டாளங்களையும் தன் ரசிகர்களாக வசம் செய்தார். தமிழ், ஹிந்தி என தன் திறமையை வெளிப்படுத்திவரும் மாதவன், தன் இமேஜை பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல், எவனோ ஒருவன் படத்தில் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறார்.

எவனோ ஒருவன் என்ற தலைப்பிற்குக் கீழே உங்களில் ஒருவன் என்ற வாசகத்தைப் படிக்கும்போதே, இதில் ஒரு எளிமையான மனிதனின் எதார்த்தமான வாழ்க்கையைத்தான் படமாக்கியிருப்பார்கள் என்று தோன்றும். அது உண்மைதான். இப்படத்தின் முன்னோட்டக் காட்சிகளே மிரட்டுகின்றன.

இப்படத்தில் சண்டைக்காட்சிகள் இல்லை. பாடல் காட்சிகள் இல்லை. வழக்கமான விதிகளை உடைத்துப்போடும் திரைப்படங்களில் இந்தப்படமும் நிச்சயமாய் இடம் பெறும் என்பதில் சந்தேகமே இல்லை.

இப்படத்தின் இயக்குனர் நிஷிகாந்துக்கு சுத்தமாக தமிழ் தெரியாது என்றாலும், 40 நாட்கள் தமிழகத்தில் இருந்து நம் கலாச்சாரத்தை, பண்பாட்டை தெரிந்து கொண்டுள்ளார். இதற்கு பிறகே தமிழில் படத்தை இயக்க முடிவு செய்தார்.

மாதவனின் புன்னகைப் பூச்செண்டில் இன்னும் ஒரு பூவை சேர்த்த மாதிரி, இப்படத்தின் மூலம் மாதவன் வசனகர்த்தா என்ற சிறப்பையும் பெறுகிறார். மராட்டிய மொழி தெரிந்த மாதவன், இப்படத்துக்கான வசனங்களை தமிழில் அவரே எழுதியுள்ளார்.

'இது ரீமேக் காலம்' என்பதால், இந்தப் படத்தை ரீமேக் செய்யவில்லை. இப்படி ஒரு நல்ல படம் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற காரணத்தால்தான் பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் மூலம் உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இதனால் தமிழனின் நிலை இப்படித்தான் இருக்குமோ என்ற சிந்தனை வராமல், எந்த ஒரு சராசரி மனிதனும் இந்த நிலையில்தான் இருக்கிறான் என்பதையே இந்தப் படம் உணர்த்தும் என்று படத்தைப் பற்றிய தகவல்களை மாதவன் பகிர்ந்துகொண்டார்.

இப்படம் முழுவதும் சென்னையைச் சுற்றியே எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மாதவன், லாபமோ, நஷ்டமோ, அதில் தான் பாதியை ஏற்றுக்கொள்வதாக கூறியிறுக்கிறார். இப்படி மாதவனின் சபாஷ்கள் தொடர்ந்துகொண்டே போகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து லீலை, வாழ்த்துகள், இந்தியில் பாம்பே மேரிஜான், சன் கிலாஸ் போன்ற திரைப்படங்களில் தனது லீலைகளை தொடர்ந்து கொண்டு வருகிறார்.

மற்ற முன்னணி கதாநாயகர்களும் இதுபோன்ற நல்ல படைப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டால் தமிழ் சினிமா வளம் பெரும். (இது ஒரு வேண்டுகோள் மட்டுமே)

எவனோ ஒருவன் - விரைவில் வெல்ல வருகிறான்.