தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

1.12.07. சென்னை மேயர் ராமநாதர் அரங்கம், மின்விளக்குகளோடு விழாக்கோலமாக காட்சியளித்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் மகனும், இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவருமான ஜீவாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு திரையுலகமும், அரசியல் உலகமும் திரண்டு வந்தது.

நுழையும்போதே ஸ்ரீகாந்த் தேவாவின் இசைக் குழுவினர் பாடல்களை வெடித்துக் கொண்டிருந்தனர். கருப்பு உடையில் கச்சிதமாய் ஜீவா. முழுவதும் கண்ணாடி சில்கள் பதிக்கப்பட்ட சேலையுடன் அருகில் அவரது மனைவி. (நிச்சயமாய் அவரை விட சேலையின் எடை அதிகமாகயிருந்திருக்கும்!)

நிகழ்ச்சியின் ஹைலட் தமிழக முதலமைச்சரின் வருகை. ஜீவா தம்பதியினர் முதல்வரிடம் பணிவோடு ஆசிபெற்றுக்கொண்டனர். முதலமைச்சர் வெளியே சென்றதுமே கலைஞானி கமல்ஹாசன் உள்ளே நுழைந்தார். அவர் திரையில் மட்டுமே சிறந்த நடிகர் என்பதை அவரின் சிரிப்பு சிதறல்கள் உண்மையாக்கின.



யாரை அழைப்பது, யாரை விடுவது எனத் தெரியாமல் ஜீவா உட்பட மேடையிலிருந்த அனைவருமே திணரிக்கொண்டிருந்தனர். அடுத்து வந்தவர் இசைஞானி இளையராஜா. இசைஞானியின் சிரிப்பும் அவரின் இசைபோலவே இருந்தது. (அசலாக... காப்பியில்லாமல்). வருகிறவர்களை பணிவோடும் பாசத்தோடும் மரியாதையோடும் வானத்தில் பறந்தபடியே வரவேற்றுக்கொண்டிருந்தார் ஜீவா.

பாரதிராஜா, பாலச்சந்தர் என வரிசையாக தொடர்ந்து கொண்டே போனது வாழ்த்துக்கள்.

சிரிப்பதிலும், நடப்பதிலும் தன் நடனத்தைப் போலவே சுறுசுறுப்பாக காட்சியளித்தார் பிரபுதேவா. மணிரத்னம், சுஹாசினி ஜோடியாக வந்து வாழ்த்தினார்கள். நடிகைகளில் வாழ்த்து சொல்ல வந்தவர்கள் மீனா, சங்கீதா. யார் இவர்? எங்கேயோ பார்த்திருக்கோமே? என்று அனைவரும் சிந்தித்தப்படி நிற்க... வாழ்த்துச் சொல்லி திரும்பினார் கற்றது தமிழ் நாயகி அஞ்சலி. வாழ்த்துவதற்காக மேடை ஏறிய அடுத்த ஜோடி குஷ்பு, சுந்தர்.சி. வழக்கமாகவே புதுமையாக ஓவியத்தைக் கொடுத்து வாழ்த்தினார் பார்த்திபன். வாழ்த்து சொல்லிய விக்ரம், தன் ரெமோ முத்தத்தால் ரசிகர்களையும் பரவசப்படுத்தினார். விக்ரமிற்குக் ஒலித்த அதே விசில் சத்தம் சத்யராஜிக்கும் ஒலித்தது.

வாழ்த்து சொல்ல ஒரே சமயத்தில் மேடை ஏறியவர்கள் விஜயகாந்த், தயாநிதிமாறன், சத்தியராஜ். முதலில் வாழ்த்திய விஜயகாந்த், அடுத்து வாழ்த்துவதற்காக நின்று கொண்டிருந்த தயாநிதி மாறனையும், சத்தியராஜையும் உடன் அழைத்தார். விஜயகாந்தும், தயாநிதியும் அருகில் நின்று சிரித்துப் பேசிக்கொண்டனர். விஜயகாந்தின் கட்சியில் சேர தயாநிதி ரகசிய சந்திப்புகளை மேற்கொண்டார் என செய்திகள் பரவினாலும், மேடையில் நடந்தது வெளிப்படையான சந்திப்பாகவே இருந்தது.

அண்ணன் சூர்யாவின் பின் தன் சிரித்த முகத்தை காட்டியபடி கார்த்தி. அண்ணனும், தம்பியும் சேர்ந்து ஜீவாவை வாழ்த்தினார்கள். இளைய தலைமுறை நடிகர்களில் ஜீவாவை வந்து வாழ்த்தியவர்கள் விஷால், சிம்பு, பரத். இயக்குனர்கள் விக்ரமன், எழில், லிங்குசாமி தெரிவித்த வாழ்த்துகளில் நன்றியும் கலந்திருந்தது.

மேடையில் ஜீவாவோடு கலகலப்பாக பேசியவர்களில் ஒருவர் சரண்யா. ஜீவாவவும் குஷியோடு பதிலுக்கு கலகலத்தார். நிகழ்ச்சியில் அடையாளம் காணப்பட்ட அரசியல் தலைகள், வைகோ, மு.க.ஸ்டாலின், இல.கணேசன் போன்றவர்கள். வரிசையாக திரைப்பிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் வாழ்த்து சொல்ல வந்து கொண்டே....... யிருந்தனர். நிகழ்ச்சியின் துவக்கத்திலிருந்து இருதிவரை மேடையில் நன்றியோடு வாலாட்டிக்கொண்டிருந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தலைசுற்றலோடு திணறியவர்களில் ஜித்தன் ரமேஷும் ஒருவர்.