பழனி - திரைவிமர்சனம்

அரச்ச மாவ அரப்போமா...
தொவச்ச துணி தொவப்போமா...

'சின்ன தளபதி' என பட்டம் சூட்டப்பட்டுள்ள 'பரத்'தான் ஹீரோ. பக்கா கமர்ஷியல் படம் என்று சொல்வதைவிட, பக்கா பேரரசுவின் படம் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
சூப்பர் ஸ்டாரு அண்ணாமலைக்கு போனாரு (சரி), இளைய தளபதி சிவகாசி போனாரு (சரி), அல்டிமேட்டுதான் திருப்பதி போனாரு (சரி), இப்போ பரத் பழனிமலை ஏற வேண்டிய அவசியம் என்ன? குழந்தைகள் ஐஸ்கிரீம் சாப்பிட அடம்பிடிப்பது போல் இருக்கிறது. இளைய நடிகர்கள் தளபதியாக ஆசைப்படுவது.

சரி பழனிக்கு பயணம் செய்வோம்... மின்கம்பியில் பல்டி அடிப்பது, காரில் சென்று கொண்டிருப்பவர்களை சைக்கிளிலேயே பின் தொடர்ந்து பிடித்துவிடுவது, சைக்கிள் வீல், லாரி டையர் போன்ற ஆயுதங்களை வைத்து எதிரிகளை தாக்குவது என பல சாகசங்கள் புரிந்திருக்கிறார் பரத்.
பத்து வயதிலேயே கொலை செய்துவிட்டு கைதியாக இருக்கும் வெள்ளையன் (பரத்) பெரியவனானதும் ரிலீசாகி ஒரு வேலையை தேடிக்கொள்கிறான். தன் வேலைக்கு சிபாரிசு செய்த தன் முதலாளியின் மனைவியை (குஷ்பு) தன் தாயாக நினைக்கிறான். பின் தெரிய வருகிறது. தன் தாயாக நினைத்தவள் தன் சொந்த அக்காதான் என்று. குஷ்புவிற்கும் இந்த உண்மை தெரியவர வெள்ளையனாக இருப்பது தன் தம்பி பழனிதான் என்பதை புரிந்துகொண்டு, பத்து வயதில் கொலை செய்த கொலைகார பழனியை வீட்டை விட்டு தன் தம்பி பழனியை துரத்திவிடுகிறார் அக்கா குஷ்பு. சின்ன வீடு வைத்து கொடுமை படுத்தும் மாமாவிடமிருந்து தன் அக்காவை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே கதையாக சொல்லப்படுகிறது.

(பேரரசு படத்தில் ஃப்ளாஷ் பாக் இல்லாமலா? பழனி பத்து வயதில் செய்த கொலை நியாயமானதுதான் என காட்டுவதற்கு ஒரு ஃப்ளாஷ் பாக். படத்தில் பத்து நிமிடத்திற்கு வந்து பஞ்ச் வசனங்களை அள்ளி தெரித்துவிட்டு செல்லுகிறார் இயக்குனர் பேரரசு. அந்த பத்து நிமிடங்களில் படத்தின் ஹீரோ பரத்தா, இல்ல இயக்குனர் பேரரசுவா என்று பெரிய சந்தேகமே வருகிறது).
படத்தின் தன் கதாபாத்திரமாகவே ஒன்றி வாழ்ந்த ஒரே ஒருவர் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா மட்டும்தான்.

'சும்மா அதிருதில்ல', 'எவன் அடிச்சா பொறி கிளம்பி பூமி அதிருதோ அவன் தான் தமிழ்' என்று தளபதிகளின் வசனங்களை அள்ளி விடுகிறார் தளபதி பரத். சில இடங்களில் உதடுகள் திறந்து வசனம் பேச ரொம்ப சிரமப்படுகிறார் பரத்... பாவம். (ஒட்டு மீசை ரொம்ப உருத்தியதோ)
(விஜய் மாதிரியே நடிப்பதை பரத் மாற்றிக்கொண்டால் நன்றாகயிருக்கும்)
இதற்கு இடையில், 'ஐ லவ் யூ, ஐ லவ் யூ' என்று பாடும் கார்த்திக், சாதனா சர்கம் இருவரின் குரல்களும் ஐஸ்கட்டி மழை, முட்ட பரோட்டா, கொத்து பரோட்டா' என்று ஒரு கடைசியில் ஒரு பாட்டு, இயக்குநர் பேரரசுவிற்கு ஹோட்டலில் சாப்பிடும்போது வந்து உதித்த வரிகளோ.
கமர்ஷியல் திரைப்படங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று மக்களை மகிழ்விப்பது. மற்றொன்று மக்களை முட்டாளாக்குவது. இந்த இரண்டில் பழனி இரண்டாவது ரகம்.