தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

காளை - திரை விமர்சனம்


'திமிரு' என்ற மாபெரும் வெற்றிப்படத்தை இயக்கிய தருண் கோபி இயக்கியிருக்கும் இரண்டாவது படம் 'காளை'. என்னவோ சில சமயங்களில் தமிழ் சினிமா இந்த மாதிரியான திரைப்படங்ளையும் சந்திக்க வேண்டிய விதி ஏற்பட்டுவிடுகிறது.

கல்லூரி மாணவன் ஜீவா (சிம்பு). கல்லூரி மாணவி பிருந்தா (வேதிகா). ஜீவா தன்னை காதலிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், தன்னை தொந்தரவு செய்வதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். பிருந்தா புகார் கொடுத்த ஜீவா என்று யூகிக்க, அதுதான் இல்ல. வில்லன் பெயரும் ஜீவாதான். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் பிருந்தாவின் தந்தையின் பெயரும் ஜீவாதான்.

தேனி மாவட்டத்தில் ஊருக்கு நல்லது செய்து காவல் தெய்வமாக இருந்து வந்த சிம்புவின் பாட்டியை கொன்று விடுகிறார் வேதிகாவின் தந்தையான ஜீவானந்தம் (லால்). இவரை பழிவாங்குவதற்கு சென்னையில் வளம் வருகிறார் சிம்பு. ஒரு கட்டத்தில் வேதிகா சிம்புவை காதலித்துவிடுகிறார். வேதிகாவை கடத்திச் சென்று தன்னுடைய இடத்திற்கே வேதிகாவின் தந்தையை வரவழைத்து பழிவாங்க திட்டமிடுகிறார்.

கதை என்று சொல்லும் அளவிற்கு படத்தில் எதுவும் இல்லை. கதையைத் தேட வேண்டிய நிலை. நாயகன் பெயரும் ஜீவா, வில்லன் பெயரும் ஜீவா, ஃப்ளாஷ் பேக்கில் வரும் சிறுமி சங்கீதா என்று நினைத்தால்..... இல்லை, அது சிம்புவின் பாட்டி. இப்படி திருப்பங்கள் என்ற பெயரில் திரைக்கதையில் பல குழப்பங்கள் செய்திருக்கிறார் இயக்குனர்.

'திமிரு' படத்தின் சில சாயல்கள் இதிலும் இருப்பது படத்தின் பலவீனம்.

திமிரு காளை
சென்னை vs மதுரை சென்னை vs தேனி
தீயில் எரிந்து சாகும்
ஸ்ரேயா ரெட்டி
தீயில் எரிந்து சாகும்
சிம்புவின் பாட்டி
ஸ்ரேயா ரெட்டியின் வசனங்கள் சங்கீதாவின் வசனங்கள்

(என்னடி மாப்ளே)

இப்படி பல பொருத்தங்கள். 'திமிரு' வெற்றிப்படமாக அமைந்தது. 'காளை' வேலைக்கு ஆகாமல் போய்விடுகிறது.

வேதிகா... சில ஃப்ரேம்களில் அட்டக்கத்தி. 'காள காள காள...' பாடல் மட்டும் பரவாயில்லை. சிம்புவின் அத்தையாக வரும் சங்கீதா நல்ல நடிகையாக இருந்தாலும இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. எவ்வளவுதான் நடிக்க முயற்சி செய்தாலும் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்திற்கு பொருத்தாமலே போகிறார் வில்லனாக வரும் லால்.

போலீஸ் அதிகாரிகள் சிம்புவை 'அய்யா... அய்யா' என்று அளவு கடந்து மரியாதை செலுத்துவது கொஞ்சம் ஓவர். க்ளைமாக்ஸ் காட்சியில் மிளகாய் தூளை அள்ளி முகத்திலும் உடம்பிலும் பூசிக்கொள்வது புரியாத புதிர்.

ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவில் பிரமாண்டம் உள்ளது. ஆண்டனியின் படத்தொகுப்பு வழக்கம் போலவே விளையாடியிருக்கிறது. கொஞ்சம் அளவுக்கு மீறி நடித்துவிட்டாலும் நடனத்தில் பட்டையை கிளப்பி கைதட்டல் வாங்குகிறார் சிம்பு. இவையெல்லாம் இருந்தாலும் படத்தில் கதையில்லையே.

நீ பொல்லாதவன், நான் கெட்டவன் என்று, வேறு நடிகரை தாக்குவதை தவிர்த்திருக்கலாம். படத்திற்கு காளை என்று பெயர் வைத்துவிட்டதாலோ என்னவோ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஒரு காளை வந்துபோகிறது.

'ஜோடி நம்பர் ஒன்' பிஸியில் 'காளை' படத்தை கோட்டைவிட்டு விட்டாரோ என்னவோ. சரி, சிலம்பாட்டத்தையாவது ஒழுங்காக ஆடுகிறாரா பார்க்கலாம்.

ஹே... டன்டநக்கா ஹே... டனுக்குநக்கா!