தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

பீமா - திரைவிமர்சனம்


ரொம்பவும் தாமதமாக பரிமாறப்பட்டிருந்தாலும் சூடும், சுவையும் குறைந்துவிடாத அளவில் அமைந்திருக்கிறது பீமா. இளைய நடிகர்களின் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தக் கூடிய ஒரே நடிகர் விக்ரம் மட்டும்தான். கமர்ஷியல் படமாக இருந்தாலும், அவைகளையும் தரமாக கொடுக்கிற இயக்குநர்களில் லிங்குசாமியும் ஒருவர். இதிலும் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். கதை புதியதாக இல்லை என்றாலும் திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என எல்லா அம்சங்களும் சரியான விதத்தில் கையாளப்பட்டிருக்கின்றன.

ராமேஸ்வரம் பகுதியில் ஒரு ஏட்டின் மகனாக வளர்கிறான் சேகர் (விக்ரம்). அந்த பகுதியில் அநியாயங்களை தட்டிக் கேட்கும் நல்ல ரவுடியாக வளம் வருகிறார் சின்னா (பிரகாஷ்ராஜ்). இதனால் சேகருக்கு சின்னாவை பிடித்துவிடுகிறது. சின்னாவை தன் கனவு நாயகனாக நினைத்து வளர்கிறான். சின்னாவை போல நாமும் இருக்க வேண்டும் என்று ஆசைபடுகிறான். பெரியவனானதும் சின்னாவின் ரவுடி கும்பலில் சேகரும் சேர்ந்து கொள்கிறான். சென்னையில் வளம் வரும் சின்னாவிற்கு இவன்தான் சேகர் என்பது சில நாட்களுக்குப் பிறகே தெரிய வருகிறது. சின்னாவோடு சேகரும் இருப்பதினால் சின்னாவின் பலம் கூடுகிறது. இதற்கிடையில் சேகருக்கு ஒரு பெண்ணோடு மோதல் ஏற்படுகிறது, மோதல் காதலாகிறது. காதலில் விழுந்துவிட்டதால், தன்னை நம்பி ஒரு பெண் இருப்பதால் தன் வழியை மாற்றியமைத்துக்கொள்ள நினைக்கிறான். சேகர் சின்னாவோடு நெருங்கிப் பழகுவதால் மற்ற சக ரவுடிகள் பொறாமையில் சில வில்லங்கம் செய்துவிடுகிறார்கள். சின்னாவை விட்டு சேகர் பிரிந்துவிடுகிறான். சேகர் சென்று விட்டதால், சின்னாவின் பலம் குறைகிறது. சற்று சாய்ந்து கொண்டிருந்த திரைக்கதை நிமிர்கிறது.

எதிராளி விழித்துக்கொள்கிறான். உலகத்தில் இருக்கும் எல்லா உறவுகளின் உருவமாக சின்னாவை நினைத்த சேகர், சின்னாவுக்கு உதவிகள் செய்தானா? மீண்டும் சேகர் சின்னாவோடு இணைந்தானா? என்பதை சொல்கிறது மீதிப்படம்.

நீ யார் என்று கேட்பதற்கு விக்ரம், நான் 'பீமா' என்று சொல்லும் காட்சி சூப்பர். போதையில் விக்ரம் போலீஸ் அதிகாரியிடம் (ஆசிஷ் வித்யார்த்தி) 'தில்'லோடு பேசுவது தூள்.

விக்ரம் - த்ரிஷா ஜோடி பொருத்தம் சூப்பர்.

முதல் மழையாக நனைத்துக்கொண்டிருந்த ஹரிஷ் ஜெயராஜின் இசை, ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவாலும், ஆண்டனியின் படத்தொகுப்பாளும் கனமழையாக பொழிகிறது. லிங்குசாமி ஒரு கவிஞரும் கூட என்பதினாலோ என்னவோ பாடல்களில் கவிதை நயம் வழிந்தோடுகிறது.

பீமாவான விக்ரமிற்கு காதல் வந்ததும் தன் அறையில் நண்பனோட பேசுகிற வசனம் இது...

அதே படுக்கை, அதே தூக்கம்

ஆனா வேற மாதிரி

அதே ஜன்னல், அதே பூ

ஆனா வேற மாதிரி

சைக்கிள் கேப்பில் வசன கவிதைகளையும் அடித்துவிட்டிருக்கிறார் லிங்குசாமி.

மார்பில் குண்டுபாய்ந்த பிறகும் தம்கட்டி எழுந்து நின்று வசனம் பேசுவதை நாம் எத்தனையோ தமிழ் படங்களில் பார்த்துவிட்டோம். படத்தில் சுடப்பட்ட அனைவரு:ம அடுத்த நொடி இறந்து விடுகிறார்கள். விக்ரமை தவிர... (அவரு தானப்பா ஹீரோ)

இருந்தாலும் திருவிழாவில் பலூன்களை சுடுவது மாதிரி மனிதர்களைப் போட்டுத்தள்ளுவது கொஞ்சம் ஓவர்தான். படத்தில் மறந்துவிடமுடியாதவர்களில் ஒருவர் சண்டை காட்சிகள் அமைத்த கனல்கண்ணன். (பிரகாஷ்ராஜும், ரகுவரனும் தங்களுடைய பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்)

பீமா - வென்று விட்டான்.