வாழ்த்துகள் ---- திரை விமர்சனம்

"தம்பி" திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் இன்னொரு திரைப்படம் "வாழ்த்துகள்".
ஆங்கிலம் கலந்த தங்கிலிஷ் வசனங்களை தவிர்த்திருப்பது வரவேற்கப்படவேண்டிய நல்ல முயற்சி. "கதிரவன்", "கயல்விழி", "வெண்ணிலா" என்று கதாபாத்திரப் பெயர்களில் தொடங்கி படத்தில் தமிழ் தவழ்கிறது. "திருமண வரவேற்பு நிகழ்ச்சி", "பயணச்சீட்டு", "வண்ணம்", "வணக்கம்", "அறை" இப்படி தமிழனின் பேச்சு வழக்கிலிருந்து கொலைசெய்யப்பட்ட பல வார்த்தைகளை திரையில் உயிரோடு உலவவிருகிறார் இயக்குநர் சீமான்.
மருமகளின் கொடுமையால் நண்பனின் பெற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்கின்றனர். பெற்றோர் மேல் அதிகம் பாசம் வைத்திருக்கும் மாதவன் (கதிரவன்), தனக்கு திருமணமானாலும் இதே நிலை வரும் என்று பயப்படுகிறார் மாதவன். இந்நிலையில் கூட்டு குடும்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வரும் பாவனாவை (கயல்விழி) சந்திக்கிறார். வழக்கமான தமிழ் நாயகர்களின் பாணியில் கதாநாயகியை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார் நம் "அலைபாயுதே" மாதவன். ஒரு வழியாக பாவனாவிடம் சம்மதம் வாங்கிவிடுகிறார் மாதவன், இந்த காதலுக்கு பாவனாவின் குடும்பம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. சிதைந்துபோன பாவனாவின் குடும்பம் மீண்டும் இணைகிறதா?, மாதவன் பாவனாவை மணந்தாரா? என்பதே கதையின் முடிவு.....
திரைப்படத்தின் கதையைப் பார்த்ததும் தவிர்த்துவிடவே முடியாமல் சட்டென நம் நினைவிற்க
ு வந்து செல்லும் திரைப்படம் "காதலுக்கு மரியாதை". திரைக்கதை ஆமையைவிட மெதுவாக நகர்த்தப்பட்டிருக்கிறது. கதையமைத்துவிட்டு அதில் கருத்துக்களைச் சேர்க்காமல், கருத்துக்களை சேகரித்துவிட்டு அதற்காக கதையமைத்திருக்கிறார் சீமான். மாதவன், தனக்கு காதல் வந்ததும் கூடைப்பந்து பயிற்சி வேளையில் தன் நண்பனோடு தன் காதலை பகிர்ந்துகொள்கிறார். இந்த ஒரு காட்சியில் மட்டுமே மாதவன் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறார். மற்ற காட்சிகளில் மாதவன் வந்து போகிறார் அவ்வளவுதான். பாவனா சுமாராக நடித்திருக்கிறார் மற்றபடி மாதவனே மயங்கிவிழும் அளவிற்கு பாவனா அழகானவர என்று தெரியவில்லை. கதையில் அடுத்து என்ன நிகழப் போகிறது என்று எளிதில் கனித்துவிட முடிகிறது. திரைக்கதையில் பெரிய அளவில் திருப்பங்கள்ôக எதுவுமே இல்லை.
மாதவன் கலைஞர் தொலைக்காட்சி பார்ப்பதும், அதில் கலைஞரும் பெரியாரும் பேசிக்கொள்வது போல காட்சிகள் வருவதும் கதைக்கு தேவையா என்பதை சீமானிடம் தான் கேட்கவேண்டும். தமிழகத்தில் சாதித்த பெண்கள் எத்தனையோ பேர் இருக்க, தமிழகத்தின் சாதித்த பெண்களாக கவிஞர் கனிமொழி அவர்களையும், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களையும் காண்பித்து அவர்கள் தலையில் பனிக்கட்டி வைத்து குளிர வைத்திருக்கிறார் இயக்குநர் சீமான். ( சரி.... சரி.... மாதவன் பார்த்துக்கொண்டிருப்பது கலைஞர் தொலைக்காட்சியாச்சே....?)
"மனிதன் மூச்சு விட மறக்கலாம், முயற்சி செய்ய மறக்கலாமா?" "இந்த இயற்கை அழகாக தெரியவில்லை", "நீ என் அருகில் இருக்கும் போது'..... சுவிங்கம் மாதிரி இழுத்துக்கொண்டிருக்கும் திரைக்கதையில் பஞ்சு மிட்டாய் மாதிரி இப்படி சில வசனங்களும் வந்து போகிறது.
இவ்வளவு கொடுமைகளுக்கு மத்தியிலும் படத்தில் ஆறுதலாக அமைவது யுவனின் இசை மட்டும்தான். இரத்தம் வடிகிற காதுகளில் தேன் பாய்ச்சுகிறது, யுவன் பாடல்கள்.... "எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான்" என்ற இசை தாலாட்டிற்கு, அலரல்களை நிறுத்திவிட்டு, அரங்கமே தலை அசைக்கிறது.
சீமானின் செல்லப்பிள்ளை என்பதுனாலோ என்னவோ நா.முத்துக்குமார் விரல்கள் வலிக்காமல் பாடல் வரிகளை எழுதியிறுக்கிறார். பாவேந்தர் பாரதிதாசன் "இளைய நிலா" கவிதையை பாடலாக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய நல்ல முயற்சி. மாதவன், பாவனாவை நிலாவிற்கு ஒப்பிடுவதும் நில மேகத்தில் மறையும்போது பாவனா மாதவனில், மறைந்து கொள்வதும், சீமான் வெள்ளித்திரையில் எழுதும் புதுக் கவிதை. காதல் காட்சிகளுக்கு கவிஞர் அறிவுமதியின் கவிதைகளை பயன்படுத்துவது கூடுதல் அழகு. பாடல் காட்சிகளை புல் வெளிகளில் படமாக்கி செலவுகளை மட்டுமோ மிச்சம் செய்து இருக்கின்றனர்.
பாவனா, மாதவனை பார்த்து இதற்கு முன்பு யாரையாவது காதலித்து இருக்கிறாயா? என்று கேட்க, உடனே மாதவன் பாவனவை அழைத்து சென்று தண்ணீர் விழும் பாவனாவின் பிம்பத்தை காண்பிக்கும் காட்சியில் நெஞ்சை நக்கி ஈரமாக்குகிறார் இயக்குநர் சீமான். சீமானின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள் சொல்ல தயங்கவோண்டி இருக்கிறது...
சீமானின் அடுத்த முயற்சிக்கு நிச்சயம் எங்கள் வாழ்த்துகள் உண்டு....!