தூண்டில்- திரைவிமர்சனம்

காதல், குடும்பம் என இரண்டையும் கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் அதியமான். கருமுட்டை என்ற விஷயத்தை
கதைக்கருவாக எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
ஷாம் (ஸ்ரீராயம்), சந்தியா, லண்டனில் வசித்து வருகிற புதுமண தம்பதிகள். சந்தியாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே போகிறது.
இதனால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள். அதற்கான தகுந்த சிகிச்சைகள் எடுத்துக்கொண்ட பிறகு
இவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. இரண்டு வருடங்கள் கழித்து இவர்களின் குழந்தையை திவ்யா கடத்திவிடுகிறார்.
திவ்யா யார்? அவர் எதற்காக குழந்தையைக் கடத்த வேண்டும்? என்ற கேள்விகள் எழும்போது திவ்யா ஷாமின் முன்னால் காதலி என்று
தெரிய வருகிறது, மேலும் சந்தியாவிக்கு கருமுட்டைகள் உற்பத்தி இல்லாத நேரத்தில் திவ்யா தான் அவருக்கு கரு முட்டைகள் தானம் செய்தார் எனவும் தெரிய வருகிறது.
என் கருவால் பிறந்ததால் இது என் குழந்தை என திவ்யா சொல்ல..... என் குழந்தை எனக்கு வேண்டும் என்று தாய் சந்தியா புலம்ப.....
திவ்யாவை பிரிந்ததற்கான நியாயமான காரணத்தை ஷாம் விளக்க... என்று பல இடங்களில் புருவங்களை நிமிர்த்த வைத்தபடியே நகர்கிறது திரைக்கதை. இதற்கெல்லாம் பின்னால் ஒரு சகுனி இருப்பதும் தெரியவருகிறது. எதிர்பார்ப்பதைப்போல் க்லைமேக்சில் சுபம்!
ஷாம் திவ்யாவை விட்டு விலகும் காட்சியில் வலு இல்லை.
காவியரசுவின் ஒளிப்பதிவு லண்டன
் மாநகரை இவ்வளவு தான் அழகாக காட்ட முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
அறிமுக இசையமைப்பாளர் அபிஷெக் ரேவின் இசையில் பாடல்கள் கதையோடு பொருந்தியிருந்தாலும் இதயத்தோடு நிற்காமலே போகிறது.
உதயசங்கரின் படத்தொகுப்பு அளவுக்கு அதிகமான தலைசுற்றல்.
ஷாம் பொறுப்புள்ள கணவராகவும் ஆசைக் காதலனாகவும் வந்து போகிறார். சந்தியா தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இளம் நாயகிகள் யாரும் ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தில் வந்து அசத்துகிற சந்தியா, கணவரைக் கொஞ்சும்
காட்சிகளில் மழையாக வந்து பின் குழந்தையை பிரிந்த காட்சிகளில் விழிகளை ஈரமாக்குகிறார்.
லண்டன் மடலுக்கு ஏற்ற அழகோடு உலா வந்து, வில்லியாக மிரட்டும் காட்சிகளில் சபாஷ் பெறுகிறார் திவ்யா.
மனத்தில் நிற்கும் மருத்துவர் கதாபாத்திரத்தில் வருகிறார் ரேவதி.
விவேக்! நீண்ட நாட்களுக்கு பிறகு தன் சிரிக்க வைக்கும் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். விவேக் வரும் அனைத்து காட்சிகளிலும் சிரிப்பு அலைகளின் பாய்ச்சல்.
இயக்குநர் அதியமான், திரைக்கதையில் கவனம் செலுத்திய அளவிற்கு இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என மற்ற
விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருந்தால் படம் இன்னும் பிரம்மிப்பாக இருந்திருக்கும்.
தூண்டில் / ஜஸ்ட் எஸ்கேப்