தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

பில்லா - விமர்சனம்

தொடர் தோல்விகளுக்குப் பிறகு அஜீத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அடிமேல் அடிவாங்கியும் அசராமல் எழுந்து நின்றவர், வெற்றியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். ‘தல’ ரசிகர்கள் தலைதெரிக்கக் கொண்டாடிவருகிறார்கள். இத்தனைப் படங்களில் எதிர்ப்பார்த்து எதிர்ப்பார்த்து ஏமாந்துபோன அஜீத் ரசிகர்களுக்கு நல்ல தீனி. கருப்பு உடையில் கட்சிதமாய் வரும் அஜீத்தைப் பார்த்தால், ஆண்களுக்கும் ஆசை வரும். ‘தல’ படு ஸ்மார்ட்! அஜீத்தின் 'தில்'லுக்கு சபாஷ்! ரஜினியின் சாயல் துளியும் இல்லாமல், அஜீத் படமாகவே இருக்கிறது பில்லா.

பில்லா (வில்லன் அஜீத்) இறந்த பிறகு, பில்லாவின் கூட்டத்தைப் பிடிக்க வேலுவை (ஹீரோ அஜீத்) பில்லாவாக மாற்றுகிறார் பிரபு (போலீஸ் அதிகாரி). தன் அண்ணனை கொன்றதற்காக, பில்லாவைப் பழிவாங்க பில்லாவின் கூட்டத்தில் இணைகிறார் நயன்தாரா. வேலு பில்லாவாக நடிப்பது தெரியவர, வேலுவுக்கு உதவிகள் செய்கிறார். பில்லாவின் காதலியான நமீதாவிற்கும் இந்த உண்மை தெரியவர, நமீதாவை கொன்றுவிடுகிறான் வேலு. வேலுவின் உதவியால் பில்லாவின் கூட்டத்தை போலீசார் எப்படி பிடிக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

பில்லாவாக மாற அஜீத் பயிற்சி எடுக்கும் காட்சிகள், சிரிப்பிற்கு உத்திரவாதம். 'ஆறுபடை முருகனுக்கு ஆறுதல, எனக்கு ஒரேதல' என்ற வசனம் ரசிகர்களுக்கு திருப்தி. நமீதாவும் நயன்தாராவும் கவர்ச்சிக் களத்தில் போட்டா போட்டி போட்டிருக்கிறார்கள். நயன்தாராவின் நீச்சல் உடை காட்சி, நிசப்த்த வெடிகுண்டு. இருவரும் கவர்ச்சிக்கு மட்டுமே கை கொடுத்திருக்கிறார்கள், நடிப்பதற்கு வாய்ப்புகளே இல்லை.

இந்தப் படத்திற்கு அவசியம் தேவைப்பட்டவர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். பழைய பாடல்களுக்கும் கூட புது வர்ணம் பூசி பளபளக்கச் செய்திருக்கிறார். இருந்தாலும், பாடல்களின் இசையில் இருக்கும் 'பற... பற...' வேகம், நடன அசைவுகளில் இல்லை. (இதுவும் கூட ஒரு வகை அஜீத் ஸ்டைலோ!).

நிரவ்ஷா!....இயக்குனரின் மண்டைக்குள் இருக்கும் சிந்தனைகளை துளி அளவும், குறையாமல் கேமராவுக்குள் புகுத்தியிருக்கிறார். மலேசியாவைக் காட்டி மலைக்க வைத்திருக்கிறார். அணுவர்தனின் உடையளங்காரம் கச்சிதம். படத்தில் பிரமாண்டம் இருக்கிறது. ஆனால் எதுவும் தேவையில்லாமல் இல்லை.

முன் பாதியில் இருக்கிற வேகம், திரைக்கதையின் பின் பாதியில் கொஞ்சம் குறைகிறது. என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்திருப்பதே இதற்கு காரணம். எதிர்பாராத திருப்பங்கள் எதையாவது, பின் பாதியில் சேர்த்திருக்கலாம். இருந்தாலும் இந்த குறையை விஷ்ணுவர்தனின் பிரம்மாண்டமான இயக்கம் மறைத்து விடுகிறது. இளைய இயக்குனர்களில் விஷ்ணுவர்தனுக்கு நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு.

நிற்பது, நடப்பது, பார்ப்பது என எல்லாவற்றிலும் அஜீத் தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கி இருக்கிறார். சண்டை காட்சிகளில் எதிரிகளை பறந்து பறந்து புலியாட்டம் ஆடும் காட்சிகள் நெருப்பு வெடிகள்.


பில்லா பிரமிப்பு!