அஞ்சாதே- திரைவிமர்சனம்

'சித்திரம் பேசுதடி' படத்தை இயக்கிய மிஷ்கின் இயக்கியிருக்கும் இன்னொரு படம். நீங்கள் 'வாளமீனு இயக்குநர்' தானே என்று கேட்டதற்கு, நான் வாளமீனு டைரக்டர் இல்லை, 'சித்திரம் பேசுதடி' படத்தில் எத்தனையோ சிறப்புகள் இருக்கிறது, அதை எல்லாம்
விட்டு விட்டு ஏன் வாளமீனில் மட்டும் கவனம் செலுத்துகிறீர்கள் என்று தன் நியாயமான கோபத்தை வெளிப்படுத்தினார் இயக்குனர் மிஷ்கின்.
'சித்திரம் பேசுதடி' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தரமான படத்தைக் கொடுக்க முயற்சிகள் செய்துள்ளார் மிஷ்கின்.
எதற்கெடுத்தாலும் கோபப்படுகிற துறு துறு இளைஞனாக சத்யநாதன் (நரேன்), ரொம்ப நல்லவனாக இருந்து வரும் கிருபாகாரன் (ஆஜ்மல்),
இருவரும் இணைபிரியா நண்பர்கள், போலீஸ் கான்ஸ்டரபில் மகன்கலான இருவரும் போலீஸ் காலனியில் எதிர் எதிர் வீடுகளில் வசித்து வருகிறார்கள். இருவரும் எஸ்.ஐ செலெக்ஷனுக்காக தேர்வு எழுதுகிறார்கள். நன்றாக படிக்கும் கிருபாகாரன் தேர்வில் தோல்வியடைகிறான்.
தகுதியே இல்லாத சத்யநாதன், அமைச்சரின் பி.ஏ.வான தன் மாமாவின் சிபாரிசால் தேர்வில் வெற்றி பெறுகிறான். இதைத் தொடர்ந்து இவர்களின் வாழ்க்கை எப்படி மாற்றம் அடைகிறது என்பதை சுவாரஸ்யம் குறையாமல் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.
இதற்கிடையில் இளம் பெண்களைக் கடத்தி பணம் சம்பாதிக்கும் ரௌடி கும்பல் தலைவனாக
பிரசன்னா வருகிறார். இவனுக்கு பாட்னராக வருகிறார் பாண்டியராஜன். இந்த ரௌடி கும்பலை எஸ்.ஐ.யாக இருக்கும் நரேன் பிடிக்க முயற்சிப்பதும் கடைசியில் அந்த கும்பலில் தன் நண்பன் ஆஜ்மால் இருப்பது தெரியவர... என்று திரைக்கதை வேகமாக அமைக்கப்பட்டிருக்கிறது.
படத்தின் முன் பாதியில் கொஞ்சம் நிதானம் இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி விறு விறுவென ஜெட் வேகத்தில் நகர்கிறது.
நரேன் நிறைவான நடிப்பு. முதல் பாதியில் வேகம் இருப்பதும், பின் இரண்டாம் பாதியில் நிதானமாய் இருப்பதும் என தன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மலையாள நடிகர் ஆஜ்மலுக்கு தமிழ் சினிமாவின் நல்வரவு.
'சென்னை 28' விஜயலஷ்மியை பார்க்கும்போது தங்கச்சி கதாபாத்திரத்திற்காகவே படைக்கப்பட்டிருக்கிறாரா என்று எண்ணத் தோன்றுகிறது. என்னும் எத்தனைப் படங்களில் ஹீரோ காதலிக்கும் நண்பனின் காதலியாக வரப்போகிறாரோ விஜயலஷ்மி. தந்தையின் கதாபாத்திரத்தில்
எம்.எஸ்.பாஸ்கர் கச்சிதமாய் பொருந்துகிறார். படத்தில் கதாபாத்திரத்திற்கு பொருந்தாதவர் பிரசன்னா மட்டும் தான். வில்லனாக வரும்
பிரசன்னாவைப் பார்க்கும் போது சிரிப்புதான் மிஞ்சுகிறது. இருந்தாலும் நடிக்க முயற்சி செய்திருக்கிறார், பரவாயில்லை.
படத்தின் இன்னொரு ஹீரோ ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி. செயற்கைத்தனம் இல்லாமல் கதையோடு ஒன்றிவிடுகிற இயல்பான
ஒளிப்பதிவு. சுந்தர் சி. பாபுவின் பின்னணி இசை படத்தின் இன்னொரு பலம். காட்சிகளுக்கு தேவையான இசையைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். வெகுதூர பயணத்தில் கொஞ்சம் இளைப்பாருதல் தேவைப்படுகிற மாதிரி மஞ்சள் சேலைக்கட்டி
மறுகவைக்கும் வாளமீனு ஸ்டைலில் வந்துபோகிறது துள்ளல் ஆட்டம் போட வைக்கும் 'கத்தாழ கண்ணால...' பாடல். 'கண்ணதாசன் காரக்குடி பேர சொல்லி ஊதிக்குடி' பாடல் ரகளை ரகம்.
இறுதிவரைக்கும் சுவாரஸ்யத்தைக் கொடுத்து ரசிகர்களை இருக்கைகளை விட்டு நகராமல் வைத்துக்கொண்ட மிஷ்கின் சபாஷ் பெறுகிறார்.
அஞ்சாதே / வெற்றி நிச்சயம்