தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்

இந்திரலோகத்தில் நா.அழகப்பன்

வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படம். 'இம்சையரசன் 23ஆம் புலிகேசி' படத்தில் நல்லதமிழ் பேசி மகிழ்வித்தவர் இந்த படத்திலும் நல்லதமிழ் பேசியிருக்கிறார். நல்லதமிழ் என்பது நகைச்சுவையாகிவிட்டாலும் இந்த வகையிலாவது நல்லதமிழ், மக்களைப்போய் சேர்கிறது என்பதில் மகிழ்ச்சி மிஞ்சுகிறது. வடிவேலுவிற்கு காமெடி ட்ராக்குகளை அமைத்துக் கொடுத்த தம்பி ராமைய்யா திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

தனக்குரிய காமெடி ஸ்டைலில் கலக்கலாக அறிமுகமாகும் அழகப்பன் (வடிவேலு) தன் பரம்பரை தொழிலான நாடக கம்பேனியை நடத்தி வருகிறார். இந்திரலோகத்தின் அழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரும் இந்திரனிடம் (இந்திரனும் வடிவேலு) அனுமதி வாங்கி பூலோகத்தை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். பூலோகத்தின் அழகில் மயங்கிய மூவரும் அழகப்பனின் நகைச்சுவையிலும் மயங்கி விடுகிறார்கள். இந்திரன் கொடுத்த காலம் முடிவதற்குள் ஊர்வசியும் மேனகையும் இந்திரலோகத்திற்கு திரும்பிவிடுகிறார்கள். அழகப்பனை மெய் மறந்து ரசித்த ரம்பை இந்திரன் கொடுத்த காலம் முடிந்துவிடுவதால் கற்சிலையாக மாறிவிடுகிறாள் ரம்பை (அறிமுக நாயகி சுஜா). சில காரணங்களுக்காக அந்த சிலையின் கழுத்தில் மாலையிடிகிறான் அழகப்பன், இதனால் தன் சாபம் தீர்ந்த ரம்பை இந்திரலோகம் சேர்கிறாள். தன்னைக் காப்பாற்றிய அழகப்பனை மணக்க விரும்பி அழகப்பனை இந்திரலோகத்திற்கு எடுத்து செல்கிறாள் ரம்பை. எனக்கு பூலோகத்தில் குடும்பம் இருக்கிறது என்று புலம்புகிறான் அழகப்பன். பகலில் நீ பூலோகத்திலும் இரவில் இந்திரலோகத்திலும் இருக்க வேண்டும் என்று அழகப்பனுக்கு கட்டளையிடுகிறாள் ரம்பை.

இந்திரலோகத்தைக் கண்டு வியந்து போகும் அழகப்பன் இந்திரலோகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறான், அதற்கான ஸ்படிகக்கல் ஒன்றை அவனிடம் தருகிறாள் ரம்பை. இது உன்னிடம் இருக்கும் வரையில் இந்திரலோகத்தில் நீ எங்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம் என்றும் அவனிடம் சொல்கிறாள் ரம்பை. பகலில் பூலோகம், இரவில் இந்திரலோகம், எமலோகம் (எமனும் வடிவேலு) என ரவுண்டு வருகிறான் அழகப்பன். எமலோகத்தைக் கண்டு மிரண்டுபோன அழகப்பன், எமலோகத்தில் பாவம் செய்தவர்கள் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள் எனவே பாவம் செய்யாதீர்கள் என்று பூலோகத்தில் வாழும் மக்களை எச்சரிக்கிறான், உடனே பூலோகத்தில் வாழும் அனைவரும் பாவம் செய்யாமல் நல்லவர்களாகிவிடுகிறார்கள். எல்லோரும் நல்லவர்களாக இருப்பதினால் அனைவரும் சொர்க்கம் சேர்கிறார்கள். நரகம் காலியாக இருக்கிறது, இதனால் எரிச்சலடையும் எமதர்ம ராஜா அழகப்பனைக் கொலை செய்யவருகிறான், இதனை விசாரித்த இந்திரன், நாரதரின் (நாசர்) யோசனையோடு, செய்த தவறுக்காய் ரம்பைக்கும் அழகப்பனுக்கும் சாபமிடுகிறான், எண்பது வயது கிழவனான அழகப்பனும், ஆவியாக மாறிவிட்ட ரம்பையும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் கதை.

வழக்கமான தமிழ் சினிமா நாயகர்களைப் போல கருத்துச்சொல்லி நாட்டையே திருத்துவதும், வடிவேலுவின் கருத்தால் எல்லோரும் திருந்தி சொர்க்கத்திற்கு சென்றுவிடுவதும் ஏற்றுக்குக் கொள்ளவே முடியாத ஒன்று. முன்பாதியில் சிரிப்பதற்கான நகைச்சுவை காட்சிகள் இருந்தாலும், படத்தின் பின் பாதி ஓவர் சென்டிமெண்டுகளை சுமந்து சலிப்பை தந்துவிடுகிறது.

எண்பது வயதான கிழவனாக வரும் வடிவேலு விழிகளை நனைத்து, இதயங்களை ஈரமாக்கிவிடுகிறார். இந்திரன், எமன், இயல்பான வடிவேலு (அழகப்பன்) என மூன்று வேடத்தில் நடித்திருக்கும் வடிவேலு, குரல், பாவம், வசன உச்சரிப்பு அனைத்திலும் வித்தியாசம் காட்டி, அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்.

தோட்டாதரணியின் கலை வடிவங்கள், கண்களுக்கு அளிக்கப்படும் கலர்ஃபுல் விருந்து. சில காட்சிகளில் படத்தின் நாயகன் வடிவேலுவா, கலை இயக்குநர் தோட்டாதரணியா என்று பெரிய சந்தேகமே வருகிறது. இந்திரலோகத்தையும் எமலோகத்தையும் காட்டி மலைக்க வைக்கிறார் தோட்டாதரணி. சில இடங்களில் வடிவேலுவை மறந்துவிட்டு தோட்டாதரணியின் கலை உருவங்களிலேயே கண்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.

இந்திரன் அழகிகளிடம் முத்தத்திற்கு விளக்கம் கேட்பதும், முகத்தின் அருகே வந்து 'ம்' என்று சொல்லி 'தம்' கட்டிக்கொடுப்பது தான் 'முத்தம்' என்று பதில் சொல்வது ரகளையோ ரகளை. ஸ்ரேயா ஒரு பாடலுக்கு வந்து போகிறாரே தவிர, சொல்லப்படும் அளவிற்கு பெரிதாக எதுவும் இல்லை. அறிமுக நடிகை சுபா கவர்ச்சிக் கடல்! சபேஷ் - முரளியின் இசையில் 'நான் ஒரு தேவதை... நாட்டிய தாரகை' ரசிக்கும் ரகம். படத்தின் கலையில் இருந்த பிரம்மாண்டத்தின் அளவிற்கு, கதையில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் இந்திரலோகம் இன்னும் அழகாகக் காட்சியளித்திருக்கும். இருந்தாலும் வடிவேலு என்னும் மகா நடிகனை அடையாளம் காட்டுகிறது 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்'.