தலைவாசல் ஸ்பெஷல் சொல்றாங்க கேலரி படம் எப்படி? Miniமா டிரைலர்
நட்சத்திர தூதர்கள் விஜய், நயன்தாரா

கிரிக்கெட் போட்டிகளை வளர்க்கும் விதமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் என்று சொல்லப்படும் இந்தியன் பிரீமியர் லீக்கை உருவாக்கியது. இதில் 8 அணிகள் உருவாக்கப்பட்டு அவை பல்வேறு நபர்களால் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது. கொல்கத்தா அணியை நடிகர் ஷாருக்கானும், பஞ்சாப் அணியை நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், மும்பை அணியை தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் வாங்கினர். சென்னை அணியை இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனம் பலகோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. சென்னை அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டு லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதுவர்களாக நடிகர் விஜய்யும், நடிகை நயன்தாராவும் செயல்படுவார்கள் என இந்திய சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் செயல் அதிபர் ரகுபதி தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் விளம்பர தூதுவர்களை நியமிக்கும் விழாவில் பேசிய விஜய், சமீப காலமாக கிரிக்கெட்டின் தீவிர ரசிகனாக நான் மாறி வருகிறேன். இந்தியா ஆடும் போட்டிகளில் ஸ்கோர் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த நான், தற்போது எந்த வேலையாக இருந்தாலும் அதனை ஒத்திவைதது விட்டு போட்டிகளை ஆர்வமுடன் பார்த்து வருகிறேன். இந்த நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர தூதுவராக இருக்க முடியுமா என என்னை கேட்டபோது, நான் தமிழன் என்ற முறையில் சென்னை அணியை ஆதரிப்பது இயற்கையான ஒன்று. முழு மூச்சுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான் ஆதரவு தெரிவிப்பேன். விளம்பர தூதுவராக இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்றார். நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த், சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பெயர் சூட்டப்பட்ட பிறகு அனைத்து துறைகளிலும் கிங்காக இருப்பவர்களை அழைத்து விளம்பரபடுத்த முயன்றோம். அந்த வகையில் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விஜய்யை தேர்வு செய்தோம் என்றார்.