 |
|
|
|
|
|
'சின்னத்திரையிலும் மரபுகளை உடைப்பேன்' பாரதிராஜா
ஸ்டூடியோக்களிலேயே முடங்கிக் கொண்டிருந்த கேமராக்களை இழுத்துச் சென்று செலுலாய்டில் கிராமிய மண்ணைப் பதிவி செய்தவர் பாரதிராஜா. இவர் இயக்கும் 'தெக்கத்திப் பொண்ணு' என்கிற சின்னத்திரை நெடுந்தொடர் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப இருக்கிறது. நெப்போலியன், ரஞ்சிதா என பெரிய நட்சத்திரங்களோடு களம் இறங்கி இருக்கிறார் பாரதிராஜா.
சின்னத்திரையாக இருந்தாலும், பெரிய திரையாக இருந்தாலும் உழைப்பு ஒன்றேதான். இந்த தொடரை என்னுடைய சினிமா பாணியிலேயே சொல்லியிருக்கிறேன். 16 வயதினிலே, கிழக்கு சீமையிலே படங்களையெல்லாம் பார்த்தால் என்ன உணர்வு வருமோ, அதே உணர்வை இந்த சீரியலில் அனுபவிக்கலாம்.
சினிமாவில் வாழ்க்கையை ரொம்ப வேகமாக சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் சின்னத்திரையில் அப்படியல்ல. இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடித்துவிட வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை. கொஞ்சம் நிதானமாக சொல்லலாம். கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறேன். பொதுவாக சீரியல் என்றாலே அழுகிற மாதிரி காட்சியமைப்புகள் இருக்கும். இதில் அப்படி கிடையாது. ஏன் அழுகிற மாதிரி காட்சிகளே இல்லை என்று கேட்கிற அளவுக்கு இருக்கும்.
சின்னத்திரைக்கு விரும்பிதான் வந்தேன். என்னை யாரும் கட்டாயப்படுத்த முடியாது. தமிழ்சினிமாவில் இத்தனை ஆண்டுகாலம் இருக்கிறேன். நடிகர் திலகம் சிவாஜியையே இயக்கியிருக்கிறேன். நான் சொன்னதைதான் அவரே கேட்டார். என்னை இப்படி எடு என்றோ, இதைதான் தரவேண்டும் என்றோ யாரும் கட்டாயப்படுத்த முடியாது. சினிமா மாதிரி இதில் பயம் இல்லை. முக்கியமாக ரெவின்யூ என்ற விஷயம் இல்லை.

நிச்சயமாக தொடர்ந்து படங்களை இயக்குவேன். பொம்மலாட்டம் படத்தின் வேலைகளை ஒருபக்கம் செய்து கொண்டேதான் தெற்கத்தி பொண்ணையும் இயக்கி வந்தேன். இதே மாதிரி தொடர்ந்து படங்களை இயக்குவேன்.
இப்போதைக்கு சுமார் 300 எபிசோடுகள் கொண்டு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். எங்கே சரக்கு குறைகிறதோ, அங்கே நிறுத்திக்கொள்வேன் என்று பதினாறு வயது வேகத்தோடு பேசுகிறார் அறுபத்தைக் கடந்த இந்த மண்ணின் மைந்தன். |
|
|
|
|